கடல் கடந்தும் கந்தன் கருணை
ஹாங் காங் என்ற கடல் சூழ் தீவு,
இங்கேயும் உண்டு பல தமிழர்களின் வாழ்வு!
மின்னல் வேகத்தில் வாழ்வின் ஓட்டம்
இருந்தும்
குன்றவில்லை குமரன் மீதுள்ள நாட்டம்!
இங்கும்
குன்றின் மீது குமரனின் வாசம்
எங்கும்
பரவியது அவன் பேரருளின் வாசம் !
நாமணக்க நாம் பாட
முருகனருள் முன்னிற்க
உருவான "ஹாங் காங் திருப்புகழ் சங்கம் "
இதுவும் அவனருளில் ஒரு அங்கம்
சுக்லபட்சமாம் மாதமோ ஐப்பசி
சுப்பிரமணியனின் கிட்டியது அருளாசி
ஏனெனில் அன்று தான்
கந்தன் கையில் காப்பு கட்டி
விழா காண ஊரை கூட்டி
சஷ்டி விழாவின் முதல் நாள் துவக்கம்
சகலமும் சுபமாய் முடிய அவனிடத்தில் சரணடக்கம்
ஐய்யனின் தமையன்களாம் ஐங்கரனும், ஐயப்பனும்
ஐயமின்றி தலை காக்கும் இவர்களின் அப்பனும்!
அனைவரின் ஆசி பெற்று தயாரானான் முருகன்!
ஆறு நாள் விழாவின் நாயகனாம் மால் மருகன்!
அபிஷேக அலங்காரம் முடிக்கப்பட்டு
மயில் தொகை சிம்மாசனத்தில் புறப்பட்டு
வேல் கொண்ட கந்தன் மேல் பலரின் கண் பட்டு
பக்தர்கள் அனைவரும் அவனை வழிபட்டு
இவ்வழகை காண தேவர்களும் வருவார்கள் இச்சைப்பட்டு!
காலையில் அபிஷேகங்கள் முடிய
மாலையில் அலங்காரங்கள் நடக்க
ஒவ்வொரு நாளும் முருகன் பூண்ட கோலங்கள் பல!
அவனன்றி ஓரணுவும் அசையாது ஆனால் அந்த
அலங்காரத்தித்தில் அவனுக்கு ஆபரணங்கள் பிடிக்காது!
முக்கண்ணன் மூலம் உதித்தவன்
நான்முகன் நாவை வென்றவன்
ஐங்கரனிடம் ஐயம் கொண்டவன்
ஆறுமுகத்தவன் அவன்
ஆவினன்குடியில் ருத்திராட்சதாரியாய் நின்றவன்!
ஆண்டியாய் அலங்கரித்த அந்த ஆண்டவன்
அவனே அருள் ஒளி வீசும் எங்கள் ஆதவன்!
அவன் புன் சிரிப்பில் நம் கவலை மறக்கும்
அந்த வனப்பில் பிடித்த பிணி பறக்கும்!
மலர்ந்து ஒளி வீசும் முகம்
மலர்க்கொண்ட திருக்கரம்!
தந்தைக்கு மகன் செய்யும் பூஜை
எடுத்த காரியத்தில் வெற்றிக்கு வேறென்ன தேவை?
அம்மையிடம் வேல் வாங்கி
அப்பனிடம் அருள் தாங்கி
தந்தையை வழி படும் திருக்கோலம்
நம்மையும் வழிநடத்தும் சிவபாலம்!
பாற்கடலில் பள்ளி கொண்டான் மாலன்!
அவ்வேடத்தை அள்ளிக்கொண்டான் கந்த மாறன்!
சூரன் வாதம் நாளை
அதற்கு முந்தைய வேளை
போட்டுக்கொண்டு கால் மீது காலை
படுத்துறங்கினான் இளங்காளை!
அவ்வலங்காரம் படு அமோகம்!
பக்தர்கள் நெஞ்சிலே எழும் மோகம்!
ஆறு நாள் அபிஷேகம், அலங்காரம், புறப்பாடு
கண்ட பக்தர்களின் நெஞ்சில் இல்லை குறை பாடு
ஆறாம் நாள் இன்று
சக்தியின் இளங்கன்று
படை நடத்திச்சென்று
தானவர் பல கொன்று
நற்புத்தி விட்டு அகன்று
போன சூரனுக்கு கருணை செய்து
தன் வயம் வைத்துக்கொண்ட காட்சி
இதற்க்கு ஈடும் இல்லை ஈரேழுலகத்தின் ஆட்சி!
அன்பர்கள் புடை சூழ நடந்தேறிய சூர சம்ஹராம்
கடல் கடந்தும் கந்தன் கருணையின் அங்கீகாரம்
ஆறு நாள் விழாவின் உச்சக்கட்டம்
திருக்கல்யாண தீருக்கோலம்
சேவற்கொடி கொடியுடன் நின்ற தேவா சேனாபதி
மணம் முடித்தானான் வள்ளி தேவசேனா வின் பதி
காமம் மாயை களைந்து
ஆணவமும் மறைந்து
நம் மனம் நிறைந்து
அவனை தரிசிக்க
காவடி தூக்கி
சீர்வரிசை பெருக்கி
வினைகளும் சுருக்கி
அவன் தாள் பணிய ,
முந்தை வினை மறைய,
நம் ஊன் உயிர் கரைய,
அவனுள்ளே சேர்வோமாக!
----ஓம் சரவண பவ!
படங்களுக்கு நன்றி: “ஹாங் காங் திருப்புகழ் சங்கம்” facebook பக்கம்