This post is a compilation of 2 articles/write-ups by Sri Gurunathan sir of Honkong Thiruppugazh Sangam. A person I hold in very very high regard for his devotion, flair of language and most most importantly his deep deep knowledge of many Arunagirinathar literatures. Both the articles here are written by him for his own small group of thiruppugazh enthusiasts who have been following/living/breathing thiruppugazh for many many years now. Since these articles appeared in his close circles, I am now publishing them here so that i can reference them whenever I want and if possible, someone as interested as me can also read and understand them because these articles should not be lost of anonymity.
Article 1 appears below in this post.
You may find Article 2 here
Article 1
திருஎழு
கூற்றிருக்கை - ஒரு எளிய அறிமுகம்
இந்தப்
பதிவு இந்தக் குழுவில் இருக்கும் ஒருசில ஆர்வமிக்க அன்பர்களின் வேண்டுகோளின்படி இங்கே இடப்படுகின்றது. சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு
நான் இன்னொரு குழவிற்காக எழுதிய இந்தப் பதிவை ஒருசில சிறிய மாறுதல்களுடன் இங்கே மீள்பதிவாக இடுகின்றேன்.
திருஎழுகூற்றிருக்கை அருணகிரிப்பெருமான் அருளிச்செய்தத் திருப்புகழ் மதாணியில் ஒளிவிடும் ஒன்பதாவது இரத்தினமாகும்.
இது ஒரு திருப்புகழ் பாடல் அன்று. இது அருணகிரியாரால் ஆக்கியருளப்பட்டத் தனிப் பனுவல் ஆகும். ‘ஓருருவாகிய தாரகப் பிரமத்து..’ என்று தொடங்கும் அந்தப் பாடல் திருவேரகத்துச் சுவாமிநாதசுவாமியின் மீதுப் பாடப்பட்டத் தனிப்பாடலாகும்.
முதலில், 'திருஎழுகூற்றிருக்கை' என்றால் என்ன, அதன் பாவகை, அமைப்பு, இலக்கண நெறிமுறைகள் என்னென்ன என்பது பற்றியெல்லாம் சற்றே அறிந்துகொள்வது நலம்பயக்கும்.
1. கவிவகை:
தமிழ்மொழியில் இருக்கும் ஆசுகவி, மதுரகவி, வித்தாரகவி, சித்திரகவி என்ற நாற்கவி வகைகளில் திருஎழகூற்றிருக்கை என்பது சித்ரகவி வகையைச் சேரும். இதை மிறைக்கவி, ஓவியக்கவி என்றும் கூறுவர். எண்ணலங்காரம் என்ற அமைப்பில் பாடப்படுவன இவ்வகைப் பாடல்கள். எழுகூற்றிருக்கை என்பது தமிழில் இருக்கும் 96 சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகும். இவ்வகைப் பனுவல்கள் அநேகமாக இறைவனையும், இறையருளையும் கருப்பொருளாக வைத்துப் பாடப் படுவதால் ‘திரு’ என்ற அடைமொழியைச் சேர்த்து திருஎழுகூற்றிருக்கை என்று வழங்குவது மரபாயிற்று. திருஎழுகூற்றிருக்கை என்பதைப் பிரித்தால் திரு+எழு+கூற்று+இருக்கை எனப் பிரியும். ‘கூற்று’ என்றால் ஒரு பொருளை அல்லது ஒரு கருத்தைக் கூறும் சொற்களின் கோர்வை என்பதாகும். முத்தி இன்பத்திற்கு வழியைக் காட்டும், ஆற்றுப்படுத்தும் கூற்றைக் கொண்டத் திருப்பாடல் திருஎழுகூற்றிருக்கை ஆகும்.
2. எழகூற்றிருக்கைக்கான இலக்கண விதிகள்:
கீழ்வரும் பாடல் இந்த வகைப் (குறிப்பாக இரதபந்த அமைப்பில் பாடப்படும்) பாடலுக்கான இலக்கணத்தைச் சுட்டிக்காட்டும் பாடலாகும்:
ஒன்று
முதலா ஓர்ஏழ் ஈறாச்
சென்ற
எண் ஈரேழ் நிலந்தொறும் திரிதர
எண்ணுவ
தொன்றாம் எழு கூற்றிருக்கை – அவைதாம்
இரதபெந்
தத்தினில் இடையறை இரண்டாய்ச்
சரதம
துறநடை சார்தரு பான்மையின்
ஒன்றுபன்
னான்காய் ஒரு பன்னிரண்டாய்
நின்றய
லேளவும் நிலந்தொரு முபயங்
குன்றுவ
தாய்த்தொகை கூடியொன் றிலிறும்!
இதன்
பொருள் : ஒன்று என்னும் எண் ஒன்று முதலாக
ஒரேழ் ஈறாக வந்த எண்களைப்
பதினாலு நிலந்தோறும் மீள எண்ணுவதாகும் எழுகூற்றிருக்கை.
அங்ஙனம் எண்ணப்படும் எண்கள் இரதத்திற்குத் தருமிடத்து மையத்தில் பத்தி இரண்டிரண்டாய்க் கீறி வலமும், இடமும்
வகுத்தலைத் தரும் பகுதியில் மையத்தில் ஒன்று பதினான்காகவும் அதன் அயல் இரு
பத்தியில் இரண்டும் பன்னிரண்டாகவும், ஒழிந்த மூன்று முதலிய எண்ணும் பத்திதோறும் இரண்டு குறைந்து ஏழ் என்னும் தொகை
பொருந்தி முதலே நின்ற ஒன்றில் வந்து முடியும்.
இந்த இலக்கண வகையில் பாடுவது மிகமிகக் கடினம். இவ்வகைப் பனுவல்களைப் பாடும் கவிஞருக்குப் பெரும்புலமையும், அதீத மொழித்திறனும் வேண்டும். அதற்கும் மேலாக, அவருக்கு இறைவனின் திருவருளும் நிறைந்திருக்க வேண்டும். சித்திரகவியை `அருளாளரல்லது பிறர் பாடலாகாது` எனத் தொல்காப்பிச் செய்யுளியல் உரையில் ஆத்திரையன் பேராசிரியனார் கூறி இருக்கின்றார்.
தமிழில் மட்டுமன்றி வடமொழியிலும் இவ்வகைப் பனுவல்கள் இருக்கின்றன. பொதுவாக, அஷ்டநாகபந்தம், ரதபந்தம், முரசபந்தம், பதுமபந்தம் போன்ற அமைப்புகளில் இந்தப் பாடல்களைப் பாடுவது முன்பு வழக்கத்தில் இருந்தது. ஆயினும், தமிழில் இன்று கிடைக்கும்/இருக்கும் திருஎழுகூற்றிருக்கைப் பாடல்கள் யாவும் ரதபந்த அமைப்பிலேயே இருக்கின்றன.
'பந்தம்' என்றால் 'அடைத்தல்,' 'பொருத்துதல்,' 'கட்டுதல்' என்று பொருள். இரதபந்தம் என்றால் சொற்களால் கட்டும் பாடலானது ஓர் இரதம் அல்லது தேர் போன்ற அமைப்பில் இருக்க வேண்டும். ஓர் இரதம் அல்லது தேர் எப்படி மேற்புறத்தில் குறுகியும், பின்பு படிப்படியாக விரிந்தும், மத்தியப் பகுதிக்குப்பின் படிப்படியாகக் குறுகியும் அமைந்து இருக்கின்றதோ, அதேபோன்று பாடலில் இருக்கும் எண்ணைக் குறிக்கும் சொற்கள் முதலில் குறுக்கத்தையும், பின்பு படிப்படியாக விரிவையும், மத்தியப்பகுதிக்குப் பின்னர் மீண்டும் படிப்படியாகக் குறுக்கத்தையும், இறுதியில் தொடக்கத்தைப் போன்ற குறுக்கத்தையும் கொண்டு அமையும். பாடலை இரதம்போல் வரையப்பட்ட ஓவியத்திற்குள் எண்ணுப் பெயர்கள் முறையாக அமைய அடைத்துக் காட்டுவர். அதனால்தான் இது சித்திரகவிகளில் ஒன்றான `மிறைக் கவி` என்று அழைக்கப்படுகின்றது.
3. எண்களும், எழுகூற்றிருக்கையும்:
எண் கணிதத்தின் அடிப்படையில் அமைந்தவை இரதபந்த அமைப்பில் உள்ள எழுகூற்றிருக்கை வகைப் பாடல்கள். இரதபந்தம் என்றால், மேலே குறிப்பிட்டபடி, பாடும் பாடலின் ஒவ்வொரு கூற்றிலும் இருக்கும் எண்ணைக் குறிக்கும் சொற்களின் எண்களை வரிசைப்படுத்தினால், ஒரு இரதம் அல்லது தேர் எப்படி மேலே குறுகியும் படிப்படியாக விரிந்தும் பின்னர் அடியில் குறுகியும் இருக்கிறதோ, அதே வடிவில் எண்களின் வரிசையும் அமைய வேண்டும். எழு கூற்றிருக்கைப் பாடலில் ஒன்று முதல் ஏழு வரை எண்களைக் கூட்டியும், குறைந்தும் வருமாறு அமைத்துப் பாட வேண்டும். தேருக்கு மேற்பாகம், கீழ்ப்பாகம் என்று இருப்பது போல், பாடலிலும் மேலிருந்து நடுப்பாகம் வரை ஏழு கூற்றுக்களும், நடுப்பாகத்திலிருந்து அடிப்பாகம்வரை ஏழுகூற்றுக்களும் இருக்க வேண்டும். பாடலில் பயன்படுத்தப்படும் சொற்கள் தம் ஒலி ஆற்றலாலும், பொருள் ஆற்றலாலும் எண்களைக் குறிக்குமாறும் இருத்தல் வேண்டும். அப்படிச் சொற்களை அமைத்துப் பாடும்போது, ஒவ்வொரு கூற்றின் பொருளும், ஒட்டுமொத்தப் பாடலின் பொருளும் சிறப்பாக அமையவும் வேண்டும்.
திருஎழுகூற்றிருக்கையில் எண்களைக் குறிக்கும் சொற்கள் வரும் அமைப்பு மேற்பாகத்தில் முதல் கூற்றில் ஒன்று, இரண்டாவதுக் கூற்றில் ஒன்று, இரண்டு, ஒன்று, மூன்றாவதுக் கூற்றில் ஒன்று, இரண்டு, மூன்று, இரண்டு, ஒன்று என்ற வகையில், ஏழு கூற்றுகளாக அல்லது அடுக்குகளாகக் கீழ்க்கண்டவாறு இருக்கும்:
1
121
12321
1234321
123454321
12345654321
1234567654321
பாடலின்
கீழ்ப்பாகம் தலைகீழாக கீழ்க்கண்டவாறு அமைந்திருக்கும்:
1234567654321
12345654321
123454321
1234321
12321
121
1
அதாவது,
‘ஒன்று’ என்னும்
எண்ணை முதலாகக் கொண்டுத் தொடங்கி, படிப்படியே ஒவ்வொர் எண்ணாகக் கூட்டி ஏழு அடுக்குகளை அமைத்தும்,
பின்பு ஏழு முதல் ஒன்றுவரை
ஒவ்வொரு எண்ணாகப் படிப்படியாகக் குறைத்து, ஏழு அடுக்குகளை அமைத்தும்,
நடுவில், இறைவன் வீற்றிருக்க ஒரு இடைத்தட்டை அமைத்தும்
திருஎழுகூற்றிருக்கைப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
1, 121, 12321, 1234321, 123454321, 12345654321, 1234567654321 என்ற அமைப்பில் ஒவ்வொரு எண் அதிகமாகும் போதும், மீண்டும் எண்கள் கீழிறங்கி வருவதைக் காணலாம். இதனால், சாரங்களோடுக் கூடியக் கூம்புபோன்ற தேரின் மேற்பாகம் உருவாகின்றது. மேலும், தேரைச் சுற்றிலும் தொங்கும் அலங்காரத் தொங்கல்கள், கொடிகள், குஞ்சலங்கள் போன்ற தோற்றமும் இதனால் அமைகின்றது. தேரின் நடுப்பாகத்திற்குப் பிறகு மேலே குறிப்பிட்ட எண்களின் வரிசைகள் நேர் தலைகீழாக மாறி, அடுக்கி அமைந்து, தேரின் படம் போன்ற கீழ்ப்பாகத்தை உருவாக்குகின்றன. இறுதியில், தேரின் மேல்பாகத்தின் உச்சியில் தொடங்கிய ‘ஒன்று’ என்ற எண்ணிலேயே கீழ்ப்பாகமும் முடிகின்றது. அதாவது, கூற்றுக்களின் அமைப்பு இறுதியில் கீழ்க்கண்டவாறு அமைந்திருக்கும்:
1
1 2 1
1 2 3 2 1
1 2 3 4 3 2 1
1 2 3 4 5 4 3 2 1
1 2 3 4 5 6 5 4 3 2 1
1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
. . . . . . . . . . . . . . . . . . . . . . .
இடையில்
இறைவன் அமரும் தேர்த் தட்டு
. . . . . . . . . . . . . . . . . . . . . . .
1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
1 2 3 4 5 6 5 4 3 2 1
1 2 3 4 5 4 3 2 1
1 2 3 4 3 2 1
1 2 3 2 1
1 2 1
1
4. Binomial Theorem:
மேலே இருக்கும் அமைப்பைப் பார்த்தவுடன் 'Binomial Theorem' என்ற கணித விதியின் அமைப்பில் எண்ணைக் குறிக்கும் சொற்கள் பாடலில் அமைந்திருப்பதைக் கணித விதிகளை அறிந்தவர்கள் உடன் கண்டுபிடித்துவிடுவார்கள்.
1
11^2=121
111^2=12321
1111^2=1234321
11111^2=123454321
111111^2=12345654321
1111111^2=1234567654321
இந்த
அமைப்பில் ஒரு நுட்பமானக் குறியீடும்
உண்டு. மேலே குறிப்பிடப்பட்டுள்ளக் கணித அமைப்பை
அப்படியே திருப்பிப்போட்டுப்பார்த்தால்
வருவதுக் கீழ்க்கண்டதாகும் :
1
121=11^2
12321=111^2
1234321=1111^2
123454321=11111^2
12345654321=111111^2
1234567654321=1111111^2
இடப்பக்கம்
எண்கள் விதவிதமாக மாறினாலும், வலப்பக்கம் எல்லாம் ஒன்று என்னும் எண்ணின் அடிப்படையில் இருப்பதைக் காணலாம். எண்கள் வேறுவேறாகத் தோன்றினாலும் ஒன்றில் அமைந்திருப்பதைப்போல, பல்வேறு தெய்வ வழிபாடுகளும், தெய்வத்தை வழிபடாமையும் ஒன்றேயானப் பரம்பொருளுக்கே என்ற பேருண்மைக்கானக் குறியீடு
இது என்பர்.
இன்னும் சொல்லப்போனால், ஒவ்வொரு கூற்றின் கூட்டுத்தொகை எண்களான 1, 4, 9, 16, 25, 36, 49 என்பது 12, 22, 32, 42, 52, 62, 72 ஆக அமைந்திருப்பதையும் நாம் காணலாம்.
மேற்பகுதியின் 7 அடுக்குகளின் கூட்டுத்தொகை 140. அதேபோல் கீழ்ப்பகுதியின் 7 கூற்றுக்களின் கூட்டுத்தொகை 140. இவை இரண்டையும் கூட்டினால் 280. இந்த 280 என்ற எண்ணை பூஜ்ஜியத்தை நீக்கிவிட்டு ஒற்றை எண்ணாக ஆக்கினால் வருவது 1 ஆகும்.
இதனால், திருஎழுகூற்றிருக்கைப் பாடல் என்பது ‘ஒன்று’ என்ற முழுமையையும், ‘ஏகம்' என்ற பெருமையையும் விளக்கும்படித் திகழ்கின்றது என்பர்.
5. தமிழில் உள்ளத் திருஎழு கூற்றிருக்கைப் பனுவல்கள்:
தமிழில் நான்கு அருளாளர்களே மேலும், கீழுமாக ஏழு அடுக்குகளைக்கொண்ட, இரதபந்த வடிவிலுள்ளப் பனுவல்களை அருளிச் செய்துள்ளனர். நக்கீரர், திருஞானசம்பந்தர், திருமங்கை ஆழ்வார் மற்றும் அருணகிரிநாதர் ஆகியோரே அந்த நால்வர். இந்த நக்கீரர் சங்கப் புலவர் நக்கீரரா என்பதில் ஐயத்திற்கு இடமுண்டு. மேலும், திருஞானசம்பந்தரே இந்தப் பாடல்வகையில் முன்னோடி என்றும் சொல்கின்றார்கள்.
திருஞானசம்பந்தர்
பாடியருளியப் பாடல்கள் அனைத்தையும் அவ்வப்போதுப் பாராயணம் செய்து வந்த அவரதுத் தந்தையார்
சிவபாதகிருதயர் அவைகள் நாள்தோறும் எண்ணிக்கையில் பெருகிக்கொண்டு வருவதைக் கண்டார். அனைத்துப் பாடல்களையும் அன்றாடம் பாராயணம் செய்வது மிகக் கடினமாக ஆகிக்கொண்டிருந்தது. ஆகையால், தந்தையார் சம்பந்தரிடம் அவர் பாடிய அனைத்துப்பாடல்களையும்
பாராயணம் செய்தப் பலன் கிடைக்கும் வண்ணம்
அளவில் சிறிதான ஒரு பனுவலைப் பாடிடுமாறும்,
அது மிகமிகச் சக்தியுள்ள ஒரு சிவ ஸ்தோத்திரமாக
அமைந்திருக்க வேண்டும் என்றும் பணித்தார். தந்தையின் சொல்லை மந்திரமாகக்கொண்ட திருஞானசம்பந்தர் முதன்முதலாகத் திருஎழு கூற்றிருக்கைப் பனுவலை இயற்றி அருளினார் என்று சொல்கின்றார்கள். நக்கீரர் சம்பந்தருக்குக் காலத்தால் மிக முந்தியவர். நக்கீரர்
பாடியருளியாதாகக் கருதப்படும் எழு கூற்றிருக்கையின் மொழிநடை
திருமுருகாற்றுப்படை மற்றும் சங்ககால நூல்களின் மொழி நடையிலிருந்துப் பெரிதும்
மாறுபட்டும் விளங்குகின்றது.
அண்மைக் காலத்தில் வாழ்ந்த, அருணகிரிப் பெருமானின் மறுஅவதாரம் என்று அழைக்கப்படுகின்ற, அருளாளர் வண்ணச்சரபம் ஸ்ரீ தண்டபாணி சுவாமிகள் 8, 9, 10 கூற்றிருக்கை என ஆதித்தன், விநாயகன், சிவன், அம்பிகை, திருமால், கந்தன் என அறுவகைச் சமயத்துக் கடவுளருக்கும் இவ்வகை கூற்றிருக்கைப் பாடல்களை வியத்தகு முறையில் பாடியருளியுள்ளார்.
பிற்காலப் புலவர்கள் சிலரும் கூற்றிருக்கைப் பாடல்களைப் பாடியருளியிருக்கின்றனர் என்று சொல்கின்றார்கள். அவைகள் அச்சில் இருக்கின்றனவா என்று எனக்குத் தெரியவில்லை! அவைகளைத் தேடி ஆராயவும் நான் முயலவில்லை.
பாரதிதாசன்கூட தமிழ்த்தாயைக் கூற்றிருக்கையில் ஏற்றிப்பார்க்க முயன்றதாகக் கேள்வி. ஆனால், அதைப்பற்றிய முழுவிவரம் தற்போது என்னிடமில்லை!
6. இரதத்தின் அமைப்பும், படமும்:
அருணகிரிநாதர் பாடியருளியத் திருஎழு கூற்றிருக்கைப் பாடலின் அடிப்படையில் சுவாமிமலைத் திருக்கோயிலின் இரண்டாம் தளத்தில் இரதத்தின் அமைப்பை படமாக உருவாக்கி அதைச் சலவைக் கல்லில் பொறித்து, அதைச் சுவற்றில் பதித்து வைத்திருக்கின்றார்கள். அது இணையத்தில் காணக்கிடைக்கின்றது.
அதைப் போன்ற படத்தை நாம் திருவண்ணாமலையிலும் இன்னும் சில முருகன் திருக்கோயில்களிலும் காணலாம். சுவாமிமலைக்கோ அல்லது திருவண்ணாமலைக்கோ தரிசிக்கச் செல்லும் அன்பர்கள் அவசியம் அங்கே கண்டுக் களிக்க வேண்டியவற்றுள் இந்த இரதபந்தப் படமும் ஒன்றாகும்.
7. அருணகிரிநாதரும், திருஎழுகூற்றிருக்கையும்:
வண்ண விருத்த அமைப்பில் புதிய உத்திகளைப் புகுத்தி அப்பாவினத்தின் சிறப்பைக் கூட்டிய அருணகிரிநாதர், திருஎழுகூற்றிருக்கைப் பாடலிலும் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர் காலத்துக்கு முன்னால் அருளிச்செய்யப்பட்டப் பாடல்களில், இரதத்தின் மேற்பகுதியில், முதற்கூற்றில், ஒன்று என்ற எண் அமையப் பாடப்பெற்ற அமைப்பு இல்லை. அருணகிரியாரே மேற்பகுதியின் எண் கட்டங்களுக்குச் சிகரம் வைத்தாற்போல் ஒன்று என்ற எண் அமையப் பாடி இருக்கின்றார்.
தத்துவார்த்தமாக, எல்லாம் ஒன்றில் தொடங்கி ஒன்றில் அமைகின்றன என்பதை இந்த அமைப்பு மேலும் சிறப்பாகக் குறிக்கும்படி இருக்கின்றது. மேலும், கீழும் உள்ள கூம்பு வடிவமும் இதனால் முழுமை பெறுகின்றது.
திருஞானசம்பந்தரை அருணகிரியார் முருகப்பெருமானின் அம்சமாகவே, தன் குருவாகவே கருதினார். ஞானசம்பந்தரின் அடியொற்றி, அருணகிரியாரும் திருஎழுகூற்றிருக்கை என்னும் அற்புதமானப் பாடல் வகையில் சுவாமிநாத சுவாமியின் மீது 'ஓருருவாகிய தாரகப் பிரமத்து..' என்று தொடங்கும் பாடலைப் பாடியுள்ளார். எப்படி ஞானசம்பந்தரின் திருஎழுகூற்றிருக்கையைப் பாராயணம் செய்தால், அவர் பாடிய அனைத்துப் பாடல்களைப் பாராயணம் செய்தப் பலன் கிடைக்குமோ, அதுபோன்று, அருணகிரியாரின் திருஎழுகூற்றிருக்கைப் பாடலைப் பாராயணம் செய்தால் அவர் ஆக்கியருளிய அனைத்துப் பனுவல்களைப் பாராயணம் செய்தப் பலன் கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு ஆகும்!
Continue to Article 2 சுவாமிமலை திருவெழுகூற்றிருக்கை - Article 2 (The Song and its essence)
No comments:
Post a Comment