Showing posts with label சுவாமிமலை. Show all posts
Showing posts with label சுவாமிமலை. Show all posts

Wednesday, July 1, 2026

சுவாமிமலை திருவெழுகூற்றிருக்கை - Article 2 (The Song and its essence)

Here comes the Article 2, continuation of my previous post. This contains detailed analysis of this song and its meaning/essence. 

One may read through the introduction to this format of poetry here in Article 1 - Simple Introduction

Article 2:

திருஎழுகூற்றிருக்கை –  சுவாமிமலை – பாட்டும், பொருளும் - பாடல் 18/18 – ஓருருவாகிய தாரகப் பிரமத்து...  



ஏரகத்தான், ஞானகுரு, எம்துயர் யாவும்

தீரகத்து வீற்றிருப்பான் காண்!

 

அன்புடையீர்,

வணக்கம்!

நாம் நம் முந்தியப் பதிவில் குறிப்பிட்டிருந்ததுபோல இது ஒரு திருப்புகழ் பாடல் அன்று. இது முற்றிலும் வித்தியாசமான, ஆனால் மிக அற்புதமானத் திருஎழுகூற்றிருக்கைப் பாடலாகும். இந்தப் பாடலைப் பாராயணம் செய்தால், அருணகிரிநாதரின் அனைத்து ஆக்கங்களையும் பாராயணம் செய்த/பாடியப் பலன் கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. தன் ஞானகுருநாதர் ஞானசம்பந்தப் பெருமானை அடியொற்றி அருணகிரியார் பாடியருளியப் பாடல் இதுவாகும். இந்தப் பாடலுக்கான முந்தியப் பதிவிலுள்ள முன்னுரையை இதுவரைப் படிக்கவில்லை என்றால், அதை முதலில் படித்துவிட்டு பின்பு இந்தப் பொருள்விளக்கத்தைப் படித்தல் நலம் பயக்கும்.

பாடல் (பதம் பிரிக்காமல்)

 

ஓருரு வாகிய தாரகப் பிரமத்

தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி

ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை

 

இருபிறப் பாளரி னொருவ னாயினை

ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள்

 

நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து

மூவரும் போந்து இருதாள் வேண்ட

ஒருசிறை விடுத்தனை

 

ஒருநொடி யதனில் இருசிறை மயிலின்

முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை

 

நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி

ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை

 

ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய

மும்மதன் தனக்கு மூத்தோ னாகி

நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்

அறுகு சூடிக் கிளையோ னாயினை

 

ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து

முக்கட் சுடரினை இருவினை மருந்துக்

கொருகுரு வாயினை

 

ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி

முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்

ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென

எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை

 

அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்

நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்

டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை

 

காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த

ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற

ஏரகத் திறைவ னென இருந்தனையே

 

பாடல் (பதம் பிரித்து)

 

ஓர் உருவாகியத் தாரகப் பிரமத்து

ஒரு வகைத் தோற்றத்து இரு மரபு எய்தி,

 

ஒன்றாய் ஒன்றி இருவரில் தோன்றி, மூவாது ஆயினை!

இரு பிறப்பாளரின் ஒருவன் ஆயினை!

 

ஓராச்  செய்கையின் இருமையின் முன்நாள்

நான்முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து,

மூவரும் போந்து இருதாள் வேண்ட,

ஒரு சிறை விடுத்தனை!

 

ஒரு நொடி அதனில், இரு சிறை மயிலின்

முந்நீர் உடுத்த, நானிலம் அஞ்ச, நீ வலம் செய்தனை!

நால் வகை மருப்பின், மும்மதத்து இரு செவி,

ஒரு கைப் பொருப்பன் மகளை வேட்டனை!

 

ஒருவகை வடிவினில் இரு வகைத்து ஆகிய,

மும்மதன் தனக்கு மூத்தோன் ஆகி,

நால்வாய் முகத்தோன், ஐந்து கைக் கடவுள்,

அறுகு சூடிக்கு இளையோன் ஆயினை!

 

ஐந்து எழுத்து அதனில், நான் மறை உணர்த்தும்,

முக்கண் சுடரினை, இரு வினை மருந்துக்கு

ஒரு குரு ஆயினை!

 

ஒருநாள் உமை தரு இரு முலைப் பால் அருந்தி,

முத்தமிழ் விரகன், நாற்கவி ராஜன்,

ஐம்புலக் கிழவன், அறுமுகன் இவன் என,

எழுதரும் அழகுடன் கழுமலத்து உதித்தனை!

 

அறுமீன் பயந்தனை! ஐந்தரு வேந்தன்,

நான்மறைத் தோற்றத்து, முத்தலைச் செம்சூட்டு,

அன்றில் அம்கிரி இரு பிளவாக ஒரு வேல் விடுத்தனை!

 

காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த

ஆறு எழுத்து அந்தணர் அடி இணை போற்ற

ஏரகத்து இறைவன் என இருந்தனையே!

 

பாடல் பாடப்பட்டத் தலம்:

சுவாமிமலை

பாடலின் இலக்கண அமைப்பு:

அகவற்பா

பாடலுக்குரிய இசைக் குறிப்பு:

இராகம்          : தர்பாரி கானடா

தாளம்            : ஆதி

அருஞ்சொற்பொருள்:

ஓருருவாகிய = பிரம்ம ஸ்வரூபம் என்னும் பேருவமாகிய ஓர் உருக்கொண்ட, தாரகப் பிரமத்து = பிரணவமாகிய முழுமுதற்பொருளில், ஒருவகைத் தோற்றத்தில் = ஒருவகையான உதயத்தில், இருமரபு = சக்தியும் சிவமும் என்ற இரண்டின் வழியில், ஒன்றாய் = ஒரே வடிவமாக, ஒன்றி = அமைந்து, இருவரில் தோன்றி = சக்தி மற்றும் சிவம் ஆகிய இருவராலும் உண்டாகி, மூவாது ஆயினை = மூப்பற்றவனாக ஆனாய், இரு பிறப்பாளர் = அந்தணர்கள், ஒருவன் = ஒப்பற்றவன், ஒரா = அறியாமல், இருமையின் = இரு பொருள், முன்னாள் = முன்பொரு நாள், நான்முகன் = பிரமதேவன்,  இமைப்பினில் = இமைப் பொழுதில், பெயர்த்து = கலைத்து, மூவரும் = சிவன், திருமால், இந்திரன் ஆகிய மூவர், தாள் = பாதங்கள், ஒரு நொடி = நொடிப்பொழுதில், இரு சிறை = இரு பெரும் சிறகுகள்/இறக்கைகள், முந்நீர் உடுத்த = ஊற்று நீர் + ஆற்று நீர் + மழை நீர் மூன்றும் கலக்கும் கடலை ஆடையாக உடுத்துள்ள,  நானிலம் = குறிஞ்சி + முல்லை + மருதம் + நெய்தல் எனப்படும் நால் வகை நிலங்கள், வலம் = பவனி வருதல், மருப்பு = யானைத் தந்தம்,  மும்மதம் =  யானையின் கர்ண + கபோல+ பீஜ மதங்கள்,   ஒருகைப் பொருப்பன் = ஒற்றைத் துதிக்கையினைக்கொண்ட வெள்ளிமலைபோன்ற ஐராவதம் என்னும் யானை/ஐராவதத்தின் அதிபன் இந்திரன், வேட்டனை = மணம்புரிந்தனை, நால்வாய் முகத்தோன் = தொங்குகின்ற வாய்/தும்பிக்கையை  உடைய முகத்தை உடையவன்,  ஐந்து கைக் கடவுள் = ஐங்கரன் கணபதி, அறுகு = அறுகம் புல்,  ஐந்து எழுத்து = நமசிவய/சிவயநம என்னும் பஞ்சாக்ஷரம், நான் மறை = நான்கு வேதங்கள்,  முக்கண் சுடரின் = சூரியன், சந்திரன், அக்னி என்ற மூன்றையும் கண்களாகக்கொண்ட, ஐ = தனிப்பெரும் தலைவர்,  இரு வினை = நல்வினை மற்றும் தீவினை, விரகன் = வித்தகன், நாற்கவி = ஆசு + மதுர + சித்திர + வித்தார என்னும் நான்கு வகையானக் கவிகள், ஐம்புலக் கிழவன் = ஐந்து புலன்களையும் தன் வசப்படுத்தியவன், கழுமலத்து = சீகாழியில், உதித்தனை = அவதாரம் செய்தனை, அறுமீன் = கார்த்திகை மாதர்களாகிய ஆறு விண்மீன்கள், பயந்தனை = பேற்றினை/அருளினை, ஐந்தரு வேந்தன் = ஐந்து வகையானத் (ஹரிச்சந்தனம், ஸந்தானம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம்) தருக்களை உடைய தேவலோகத்துக்கு அரசன், நால் மறைத் தோற்றத்து = (ஸ்ராயுஜம், உத்பீஜம், அண்டஜம், ஸ்வேஜதம்) நாலு வகையான மூலங்களிலிருந்துப் பிறப்பெடுத்தல், முத்தலை = முப்பிரிவுகளைக் கொண்டச் சூலாயுதம், செம்சூட்டு = செவ்விய உச்சிக் கொண்டையை உடைய,  அன்றில் = அன்றில் பறவை, அம்கிரி = கிரௌஞ்ச மலை, ஆறு எழுத்து அந்தணர் = ‘குமாராய நம' / 'சரவணபவ' என்ற சடக்கர மந்திரம் ஓதும் அந்தணர்கள், குருமலை = சுவாமிமலை, ஏரகம் = திருவேரகம்.

பொருள் விளக்கம்:

1.     தேரின் மேல் தட்டு - அடுக்கு 1  - எண் வரிசை  1

ஓருருவாகிய தாரகப் பிரமத்து:

அனைத்துக்கும் முதலான (1) ஒரே பெரும்பொருள் பிரம்ம ஸ்வரூபமாகிய ஓம் என்னும் பிரணவம் ஆகும். அத்தகைய ஒரே பிரம்ம ஸ்வரூபம்,

2.     தேரின் மேல் தட்டு - அடுக்கு 2 - எண் வரிசை  121 (இடமிருந்து வலம்)

ஒரு வகைத் தோற்றத்து இரு மரபு எய்தி ஒன்றாய்

சிவபெருமானின் ஐந்து முகங்களோடு அதோமுகமும் சேர்ந்து (1) ஒன்றாகியத் தோற்றத்தில் உதயமாகி, சக்தி, சிவம் என்னும் (2) இரண்டின் பண்புகள் மற்றும் குணநலன்களை உடன் அமைய‌ (1) ஒரே வடிவமாகி,          

3.     தேரின் மேல் தட்டு - அடுக்கு 3 - எண் வரிசை  12321 (இடமிருந்து வலம்)

ஒன்றி இருவரில் தோன்றி, மூவாது ஆயினை! இரு பிறப்பாளரில் ஒருவன் ஆயினை!

அனைத்தும் (1) ஒன்றிப் பொருந்தி அமைந்து, சக்தி மற்றும் சிவம் என்னும் (2) இருவராலும் உருவாக்கப்பட்டு, (3) மூன்றாவது என்று சொல்லும்படி, என்றும் மூவாத, மூப்படையாத இளைஞனாக விளங்குபவனாக ஆனாய்! (2) முப்புரிநூல் அணிவதற்குமுன் ஒரு பிறவி, முப்புரிநூல் அணிந்தற்குப்பின் ஒரு பிறவி என இருபிறவிகளைக்கொண்டு (2) இருபிறப்பாளர் என வழங்கப்படும் அந்தணர்கள் மரபில் ஞானசம்பந்தராக சீகாழியில் அவதரித்து அவர்களுள் ஒப்பற்ற (1) ஒருவன் என ஆனாய்!                                

(கந்தபுராணத்தின்படி, தேவர்களின் துயர் தீரவேண்டி, சிவபெருமான் சக்தியை நோக்கிட, அதனால் சிவனும், சக்தியும் கலந்த ஓர் அம்சமாய் சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து, பிரம்மமாய் நின்ற ஜோதியானது  முருகப்பெருமானாகச் சூராதி அவுணர்களை அழிக்கத் தோன்றியது. அந்தக் கதையை மேலே பொருள் விளக்கம் காணப்பெற்றப் பாடல் அடிகள் குறிக்கின்றன.)    

4.     தேரின் மேல் தட்டு - அடுக்கு 4 - எண் வரிசை  1234321 (இடமிருந்து வலம்)

ஓராச் செய்கையின் இருமையின் முன்னாள், நான் முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து, மூவரும் போந்து இரு தாள் வேண்ட, ஒரு சிறை விடுத்தனை!

ஓங்காரமானப் பிரணவத்தின் உட்பொருளை (1) ஓராமல் (அறியாமல்) பிரமதேவன் திகைத்து விழித்து நின்றது, அதை அறியாமல் படைப்புத்தொழிலை அதுவரை மிக்கச் செருக்குடன் நடத்திப் பிழையினைச் செய்தது ஆகிய‌ (2) இரண்டு (இருமையின்) குற்றங்களுக்காக, (3) முன்பொரு நாள் (முன்னாள்), (4) நான்முகனின் குடுமியை இமைப்பொழுதில் பற்றி, கலைத்து, தலையில் குட்டி, எற்றி, தண்டித்து, அவரைச் சிறையிட்டாய். பின்பு,  சிவன், திருமால், இந்திரன் ஆகிய (3) மூவரும் உன்னிடம் வந்து, உந்தன் (2) இரு திருவடிகளைப் பணிந்து, முறையிட்டு வேண்ட, பிரமதேவனை (1) ஒரு (பெரும்) சிறை விடுவித்தாய்!                  

(கந்தபுராணத்தின்படி, ஒருநாள் பிரமதேவன் சிவபெருமானைத் தரிசிக்கக் கயிலாய‌த்திற்கு வந்தார். படைப்புத் தொழிலை தாம் ஆற்றுகின்றோம் என்ற செருக்கினாலும், சிறுவன்தானே என்ற நினைப்பினாலும், அங்கிருந்தக் குமரனைப் பாராமல், வணங்காமல் கடந்து சென்றார். பிரமதேவருக்குப் பாடம் புகட்டிச் செருக்கழிக்க‌ வேண்டும் என்று திருவுளம்கொண்டு, முருகப்பெருமான் அவரை அழைத்து "பிரணவத்தின் ஒலியிலிருந்தே அனைத்தும் பிறப்பதால், 'ஓம்' என்னும் பெரும் சொல்லிற்குப் பொருளுரைத்து, அதன்பின் செல்க!" என்று  கூறினார். பிரணவத்தின் உட்பொருள் தெரியாமல் பிரமதேவன் திகைத்து, விழித்து நின்றார். அதனால், முருகப்பெருமான் சினம்கொண்டு, பிரமதேவரைக் காலால் உதைத்து, அவர் தலைமுடியைக் கலைத்து, அவர் தலையில் குட்டி, "செய்தொழிலின் பெருமை அறியாது, உட்பொருள் அறியாதுச் செய்திடுவதுப் பெரும்பிழை ஆகும்" என்று கூறி, அவரை மேலும் தண்டிக்கும் முகத்தான் சிறையில் அடைத்தான்.  பின்பு, படைப்புத்தொழில் பாதிப்பு அடையக்கூடாது என்று கருதி, அரன், அரி, இந்திரன் மூவரும் வந்து முருகப்பெருமானைப் பணிந்து, பிரமதேவனை விடுவிக்குமாறு வேண்ட, அப்பெருமானும் அவ்வேண்டுதலுக்கு இணங்கி பிரமதேவனைச் சிறை விடுவித்தான். அந்தக் கதையைப் பாடலின் மேற்குறிப்பிட்ட அடிகள் குறிக்கின்றன)

5.         தேரின் மேல் தட்டு - அடுக்கு 5 - எண் வரிசை  123454321 (இடமிருந்து வலம்)

ஒரு நொடி அதனில், இரு சிறை மயிலின், முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச நீ வலம் செய்தனை! நால்வகை மருப்பின், மும்மதத்து, இரு செவி, ஒரு கைப் பொருப்பன் மகளை வேட்டனை!

(1) ஒரு நொடிப் பொழுதில் (2) இரு சிறகுகளை உடைய மயில் வாகனத்தின் மீதேறி, ஊற்று நீர், ஆற்று நீர், மழை நீர் என்ற மூன்றும் கலந்திருக்கும் (3) முன்நீர்க் கடலை ஆடையாக‌ உடுத்ததுபோன்று அதனால் சூழப்பட்டுள்ளக்  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனப்படும் (4) நான்கு (நானிலம்) வகையான நிலங்களும் (5) அஞ்சி நடுங்கிட,  ஐந்தாம்வகை நிலமாம் பாலையென வறளும் வேகத்துடன்  நீ வலம் வருகின்றனை! (4) நான்குத் தந்தங்களையும்,  கர்ண, கபோல, பீஜ மதங்கள் என்னும் (3) மூன்று வகை மதங்களையும், (2) இரு பரந்துவிரிந்தச் செவிகளையும், நீண்டுத் தொங்கும் (1) ஒருகை எனப்படும் துதிக்கையையும் கொண்ட ஐராவதம் என்னும் வெள்ளிமாமலைபோன்ற‌ யானையின் அதிபனானத் தேவேந்திரனின் மகளானத் தெய்வயானை அம்மையாரை நீ முறைப்படித் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்துகொண்டாய்!                 

(சிவபெருமானிடத்திருந்து மாம்பழத்தைப் பெறுவதற்காக, முருகப்பெருமான் மயிலின் மீதுஏறி ஒரு நொடிப்பொழுதில் உலகை வலம் வந்ததும், தேவர்களைச் சிறைமீட்டதற்குப் பரிசாக இந்திரானல் முருகப்பெருமானுக்குத் தெய்வயானையை மணம் செய்து வைத்ததும் கந்தபுரண நிகழ்வுகளாகும். அவற்றை இந்தப் பாடல் அடிகள் குறிக்கின்றன.)

6.         தேரின் மேல் தட்டு - அடுக்கு 6 - எண் வரிசை  12345654321 (இடமிருந்து வலம்)

ஒருவகை வடிவினில் இரு வகைத்து ஆகிய, மும்மதன் தனக்கு மூத்தோன் ஆகி, நால்வாய் முகத்தோன், ஐந்து கைக் கடவுள், அறுகு சூடிக்கு இளையோன் ஆயினை! ஐந்து எழுத்து அதனில், நான் மறை உணர்த்தும், முக்கண் சுடரினை, இரு வினை மருந்துக்கு ஒரு குரு ஆயினை!  

(1) ஒரு வகையில் நோக்கினால் ஒரே யானை வடிவு என்றாலும் கூட‌, உண்மையில் முது களிறு, இளங்களிறு என (2) இரு வகைத் தோற்றத்திலும் தோன்ற வல்லவர் ஆகையால், கன்னமதம், கைமதம், வாய்மதம் என்னும் (3) மும்மதநீரும் பெருகிவர முதுகளிராக (வள்ளியம்மையை அச்சுறுத்த‌ விநாயகப் பெருமான் கிழயானையாக‌, மதம் பெருகத் தினைப்புனத்திற்கு வந்தார்) வந்துக் காட்சியளித்தக் கணபதி உனக்கு மூத்தோன் ஆயினும், தினைப்புனத்தில் உனக்குப் பின்னால் வந்ததினால், அந்த மூத்தக் கணபதிக்கும் நீ முதல்வன் ஆயினை! (4) நால்வாய் என்னும் தொங்கும் துதிக்கை அமைந்த முகத்தை உடைய (5) ஐங்கரனாம் (6) அறுகம் புல்லைச் சூடிக்கொள்ளும் கணபதிக்கும் நீ இளையவனாகவும் திகழ்கின்றாய்! சிவயநம, நமசிவய என்னும் (5) ஐந்தெழுத்துப் பஞ்சாக்ஷர மந்திரத்தின் மூலமாக விளங்குகின்ற, (4) நான்கு வேதங்களும் இவரே பரம்பொருள் என ஒருங்கே உண‌ர்த்தும், சூர்யன், சந்திரன், அக்னி என்ற (3) மூன்றையும் தன் மூன்று சுடர்க் கண்களாகக்கொண்ட‌, நல்வினை, தீவினை என்னும் (2) இருவினைகளும் முழுதும் நீங்க மருந்தாய் விளங்கும், சிவபெருமானுக்கு ஓங்காரத்தின் உட்பொருளை உபதேசித்து (1) ஒரு ஒப்பற்றக் குருநாதனாக நீஆனாய்!            

(வள்ளியை அடையத் தினைப்புனத்திற்கு வந்த முருகப்பெருமானுக்கு உதவிட, வேழமுகக் கடவுள் கணபதி ஒரு மதம்கொண்டக் கிழ யானையைப்போல் உருவெடுத்துவந்து வள்ளியை அச்சுறுத்தினார். குறிஞ்சிக் கிழவனாம் முருகனுக்குப் பின் வந்தக் காரணத்தாலும், தினைப்புனத்தில் முருகனுக்குப் பின் தோன்றியதாலும் மூத்தவர் கணபதியும் இளையோன் முருகனுக்கு சற்று நேரம் இளையவன் ஆயினர். அது இங்கே குறிக்கப்பெறுகின்றது)

7.         தேரின் மேல் தட்டு - அடுக்கு 7 - எண் வரிசை  1234567654321 (இடமிருந்து வலம்)

ஒருநாள் உமை தரு இரு முலைப் பால் அருந்தி, முத்தமிழ் விரகன், நாற்கவி ராஜன், ஐம்புலக் கிழவன், அறுமுகன் இவன் என, எழுதரும் அழகுடன் கழுமலத்து உதித்தனை! அறுமீன் பயந்தனை! ஐந்தரு வேந்தன், நான்மறைத் தோற்றத்து, முத்தலைச் செம்சூட்டு, அன்றில் அம்கிரி இரு பிளவாக ஒரு வேல் விடுத்தனை!

 

முன்பு (1) ஒரு நாள், உமையம்மையின் பெருமை வாய்ந்த (2) இருதனங்களில் சுரந்த‌ முலைப்பாலைப் பருகி, இயல், இசை, நாடகம் என்னும் (3) முத்தமிழிலும் வித்தகனாய், ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் (4) நால்வகைக் கவிகளையும் பாடும் கவிராஜனாய், ஒலி, ஒளி, ஊறு, சுவை, நாற்றம் ஆகியவற்றை உணரும் (5) ஐம்புலன்களையும் தன்வசப்படுத்திய, புலன்களை வென்றத் தலைவனாய், (6) ஆறுமுகக் கடவுள் இவனே என்று யாவரும் பரவி வாழ்த்தும்படியாகச் சித்திரத்தில் (7) எழுத இயலாத எழிலும், இளமையும் கொண்டு அழகுடனே விளங்கிட, நீ மாயை, கன்மம், ஆணவம் என்னும் மும்மலங்களையும் நீக்க வல்லத் திருத்தலமாம் சீகாழியில் திருஞானசம்பந்தனாகத் திருஅவதாரம் செய்தாய்! (6) ஆறு கார்த்திகை விண்மீன் பெண்களால் சரவணப்பொய்கையில் வளர்க்கப்பெற்று அவர்களுக்கு உந்தன் தாயார்கள் ஆகும் பேற்றினை ஈந்தாய்! ஹரிசந்தனம், ச‌ந்தானம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம் என்னும் (5) ஐந்து வகைத் தருக்களை உடையப் பொன்னுலகத்துக்கு வேந்தனாகவும் நீ திகழ்ந்தாய்! (4) நான்மறைகள் போல இரகசியமானதும், ஸ்ராயுஜம், உத்பீஜம், அண்டஜம், ஸ்வேஜதம் என்னும் நான்கு வகைப் பிறப்பு மூலங்களில் ஒன்றானதும், (3) மூன்று இலைகளைக் கொண்டச் சூலாயுதம் போன்றும், அன்றில் பறவையின் கொண்டையையப்போன்றும் மூன்றுச் செவ்வியச் சிகரமுடிகளைக் கொண்ட, பெரும் கிரௌஞ்சமலையை (2) இருகூறாய்ப் பிளக்குமாறுச் செய்திட‌  (1) ஒரு (ஒப்பற்ற), வலிமைபொருந்திய வடிவேலினை நீ விடுத்தாய்!

                                         

(தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும். ஆசு என்பது எதுகை, மோனையுடன் கூடியது; மதுரம் என்பது இனிமை வாய்ந்தது; சித்திரம் என்பது கற்பனையும், அழகும் மிக்கது; வித்தாரம் என்பது விரிவான‌ வர்ணனைகள் மிக்கது. ஸ்ராயுஜம், உத்பீஜம், அண்டஜம், ஸ்வேஜதம் என்பவை நான்கு வகையானப் பிறவி மூலங்கள். 'அண்டஜம்' என்றால் பறவைகள், மீன்கள், பாம்புகள் போன்று முட்டையில் தோன்றுவனவற்றைக் குறிக்கும். 'சுவேதஜம்' என்றால் அழுக்கில், வேர்வையில் தோன்றும் பேன், கிருமிகள் போன்றனவற்றைக் குறிக்கும். 'பீஜம்' என்பது  விதை, வேர், கிழங்கு போன்றனவற்றில் தோன்றும் தாவர வகைகளைக் குறிக்கும். 'சராயுஜம்' என்பது கருப்பையில் தோன்றும் விலங்குகள், மனிதர்களைக் குறிக்கும். கிரெளஞ்சமலை முட்டையிலிருந்துத் தோன்றும் அன்றில் பறவையின் கொண்டைகளைப் போன்ற சிகரங்களைக்கொண்டது. தேவர்களை வதைத்தச் சூரனின் தம்பியாவான் மாயாவியானத் தாரகன். அவன் கிரெளஞ்சம் என்னும் மலையாய் மாறி, பூதப்படைகளை மாயத்தால் வென்றான். அந்த மாயமலையைத் தன் ஞானவேலினால் முருகப்பெருமான் பிளந்துப் பொடியாக்கினான். அந்த வரலாற்றை இவ்வடிகள் குறிக்கின்றன.)

பாடலின் ஈற்றுப் பகுதி:

காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த ஆறு எழுத்து அந்தணர் அடி இணை போற்ற ஏரகத்து இறைவன் என இருந்தனையே!

காவிரி நதியின் வடகரையில் அமைந்துள்ளக்  'குருமலை' எனப்படும் திருத்தலத்தில் 'ஓம் குமாராய நம!’ 'ஓம் சரவணபவ!' என்று  சடக்கர மந்திரத்தை எப்பொழுதும் ஓதும் அந்தணர்கள் உந்தன் திருவடிகளைப் பரவிப் போற்றும்படி, 'திருவேரகத்தின் இறைவன் இவனே!' என்னும்படி எழுந்தருளி வீற்றிருக்கின்றாயே! உந்தன் திருவடிகளே சரணம்!    

திரும்பவும், நேர் தலைகீழாகக் கீழ்நோக்கி இந்த அடுக்குகளை அடுக்கினால் கிடைப்பது இரதபந்தமாகும்.

ஒலிக்கும் விதத்தால் அல்லது பொருளால் எண்களைக் குறிப்பிடும் இந்தப் பாடலில் இடம் பெற்றுள்ளச் சொற்கள்:

ஒன்று (13)

ஒர் உருவு, ஒருவகை, ஒன்றாய், ஒன்றி, ஒருவன், ஓரா, ஒருசிறை, ஒருநொடி, ஒருகை, ஒருநொடி, ஒருகுரு, ஒருநாள், ஒருவேல்.

இரண்டு (11)

இருமரபு, இருவரில், இருபிறப்பாளர், இருமையின், இருதாள், இருசிறை, இருசெவி, இருவகை, இருவினை, இருமுலை, இருபிளவு.

மூன்று (9)

மூவாது, முன்நாள், மூவர், முந்நீர், மும்மதம், மும்மதன், முக்கண், முத்தமிழ், முத்தலை.

நான்கு (7)

நான்முகன், நானிலம், நால்வகை, நால்வாய், நன்மறை, நாற்கவி, நான்மறை

ஐந்து (5)

அஞ்ச, ஐந்துகை, ஐந்தெழுத்து, ஐம்புலன், ஐந்தரு.

ஆறு (3)

அறுகுசூடி, அறுமுகன், அறுமீன்

ஏழு (1)

எழுதரும்                                                       

இப்பாடலின் சுருக்கமானப் பொழிப்புரை:

“எம்பெருமான் கந்தவேளே!

ஒன்றே எனப்படும் ஏகச் சொரூபமாகியப் பிரணவமென்னும் பர‌பிரம்மத்தின், ஒரே வகையான உதயத்தில் நாதம், விந்து என்னும் இரண்டின் குணங்களும் அமையப்பெற்று, சக்தியும், சிவமும் ஒரே வடிவமாக ஒன்றிப் பொருந்தி, சக்தி மற்றும் சிவன் ஆகிய இருவரிடமிருந்தும் அவதரித்து, ஒருபோதும் மூவாமல் இளம் குமரனாய் இருக்கின்றாய்!

திருஞானசம்பந்தராக இருபிறப்பாளர் என்னும் மறையோர் மரபில் அவதரித்து ஒப்பற்றவனாக நீ ஆனாய்! பிரணவத்தை ஆராய்ந்து, அதன் உட்பொருளை அறியாமல் படைப்புத் தொழிலை நடத்திவந்தப் பிரமதேவனின் பிழையையும், அவர் செருக்கையும் களையும் பொருட்டு, முன்னொரு நாள் பிரமதேவனிடம் கேள்விகேட்டு, அவர் விடையினைக் கூறாமல் விழித்து நின்றதனால் சினம்கொண்டு, அவர் தலையில் குட்டி, அவருடையக் குடுமியை அலைக்கழித்துச் சிறையிட்டாய்! பின்பு, படைப்புத்தொழில் தடையின்றி நிகழவேண்டும் என்று, அரன் அரி, இந்திரன் ஆகிய மூவரும் வந்து, உன்னிரு திருவடிகளைப் பணிந்து, வணங்கிக் கேட்டுக் கொள்ள, பிரமதேவனை நீ சிறை விடுத்தாய்! முன்நீர் கலந்தக் கடலை ஆடையாகக் கொண்ட நான்கு வகை நிலங்களைக்கொண்ட உலகங்கள் அஞ்சிட, அவற்றை நீ ஒரு நொடியில் பெரும் இறக்கைகளைக் கொண்ட மயிலில் ஏறி வலம் வந்தாய்!

நான்கு தந்தங்களையும், மூன்றுவித‌ மதங்களையும், இருபெரு செவிகளையும், ஒரு துதிக்கையையும் உடைய, வெள்ளிமலை போன்ற ஐராவதம் என்னும் யானையின் அதிபன் தேவேந்திரனின் பெண்ணாகியத் தெய்வயானை அம்மையை, வெற்றிப்பரிசாக அடைந்து, அவரை முறைப்படி மணந்து கொண்டாய்!

ஒரே திருவுருவில் விலங்கைப் போலவும், மானுடரைப் போலவும் இரண்டு வகையாகத் தோன்றும், மூன்றுவிதமான மதங்களைப் பெற்றிருக்கும் வேழமுகக் கடவுளுக்கும் ஒருவிதத்தில் காலத்தால் நீ மூத்தவனாவும் இருக்கின்றாய்! அதே நேரத்தில், தொங்கும் துதிக்கையை வாயாகவும் கொண்டத் திருமுகத்தவரும், ஐங்கரனும், அறுகம்புல்லை அணிபவரும் ஆன விநாயகப்பெருமானுக்கு நீ தம்பியாகவும் இருக்கின்றாய்!

தூல, சூக்கும, காரணப் பஞ்சாட்சரங்களின் மூலமாக நான்கு மறைகளும் உணர்த்தும் முச்சுடர்விழிப் பரம்பொருளும், தனிப்பெரும் தலைவரும், நல்வினை தீவினை இரண்டையும் அழித்தொழிக்கும் மருந்தும் ஆன பரமேஸ்வரனுக்கு ஒப்பற்ற குருநாதனாகவும் நீ ஆனாய்! முன்னொரு காலத்தில் உமையம்மையின் திருமுலைப்பால் அருந்தி, முத்தமிழ் வித்தகனாய், நான்கு வகைக் கவிகளைப் பாடும் கவிராஜ சிங்கமாய், பஞ்சத் தன்மாத்திரைகளையும் அடக்கியாளும் அதிவீரனாய், 'ஆறுமுகக் கடவுள் இவனே!' என்று யாவரும் வியந்துப் போற்றும்படியாய், ஓவியத்தில் எழுதவொண்ணாப் பேரழகனாய் விளங்கிட‌, மும்மலங்களையும் கழித்தொழிக்கும் சீகாழித் திருதலத்தில் திருஞானசம்பந்தராய் அவதாரம் செய்தாய்! சரவணப்பொய்கையில் ஆறு கார்த்திகை விண்மீன் பெண்களால் வளர்க்கப்பட்டு, அவர்களுக்கு உந்தன் அன்னையர் என்னும் பெரும் பேற்றினை ஈந்தாய்!

ஐந்து வகைத் தருக்களைக் கொண்டப் பொன்னுலகத்து வேந்தனாய் வீற்றிருந்தாய்! நான்கு வேதங்களுக்கும் மூலப் பரம்பொருளானச் சிவசக்தி வடிவானாய்! திரிசூலத்தைப் போன்று மூன்று கிளைப் பிரிவுகளையுடைய, சிவந்த உச்சிக் கொண்டைகளைக் கொண்டக் கிரவுஞ்சப் பறவையைப் போன்ற உருவில் விளங்கிய‌ மாயப்பெரு மலையாம் கிரவுஞ்சமலையானது இரு துண்டாகும்படி உன் ஒப்பற்ற வேலாயுதத்தை அதன்மீதுச் செலுத்தினாய்!

காவிரிநதியின் வடகரையில் அமைந்திருக்கும் 'குருமலை' என்னும் சுவாமிமலையில் அந்தணர்கள் நாளும் சடக்கர மகாமந்திரத்தை ஓதி, உன் திருவடிகளைப் போற்றி வணங்கும்படி, எங்கள் 'திருவேரகத்துத் தெய்வம்' என்ற பெருமையுடன் வீற்றிருந்து, நல்வாழ்வும், நற்கதியும் யாவர்க்கும் நல்கி வருகின்றாயே! உந்தன் திருவடிகளே சரணம்!!”

இந்தப் பாடலைப் பற்றிய ஒருசில குறிப்புகள்:

1. இந்தப் பாடல் தத்துவங்களையும், சித்தாந்தங்களையும், கந்த‌புராண நிகழ்வுகளையும் உள்ளடக்கியது. பல்வேறு வகையான‌ விளக்கங்களுக்கும் இடமளிப்பது. பாடல் எளிமையாகப் பாராயணம் செய்ய உகந்ததாக இருந்தாலும், பொருள் விளக்க, விளக்கப் பாடலின் பொருள் விரியும் தன்மை உடையதாகவும் இருக்கின்றது. முடிந்தவரை எளிமையாகவும், கூடியவரை விரிவாகவும் பொருள் விளக்க முயன்றுள்ளோம்.

2. முருகப்பெருமானின் அம்சமே திருஞானசம்பந்தர் என்ற தன் கருத்தை ஐயம்திரிபுற இந்தப் பாடலில் அருணகிரியார் தெளிவுப்படுத்துகின்றார். இந்தப்பாடலில் இரண்டுமுறை ஞானசம்பந்தரைப் பற்றியக் குறிப்பு வருகின்றது.

3. 'அருவமும் உருவுமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப் பிரமமாய் நின்ற சோதி' முருகப்பெருமானாக உருவாகி வந்ததையே அருணகிரியார் இந்தப் பாடலில் சுருக்கமாகக் கூறுகின்றார். 'ஒன்றே எனப்படும் ஏகச் சொரூபமாகியப் பிரணவமென்னும் பரபிரம்மத்தின், ஒரே வகையான உதயத்தில் நாதம், விந்து என்னும் இரண்டின் குணங்களும் அமையப்பெற்று, சக்தியும், சிவமும் ஒரே வடிவமாக ஒன்றிப் பொருந்தி, சக்தி மற்றும் சிவன் ஆகிய இருவரிடமிருந்தும் அவதரித்து, ஒருபோதும் மூவாமல் இளம் குமரனாய் இருக்கின்றாய்!' என்று அருணகிரியார் குறிப்பிடுவது 'சோமாஸ்கந்தர்' என்ற தத்துவத்தை, படிமத்தை உணர்த்துமாறு இருக்கின்றது.

4. ஒன்றேயான‌ மெய்பொருளின் இறைக் குணங்களை (விபூதிகள்) இந்தப் பாடலில் அருணகிரியார் குறிப்பிட்டுள்ளார். பகவத் கீதையில் கூறப்படும் விபூதிகளின் சுருக்கங்களையும் இந்தப் பாடல் கொண்டுள்ளது. மெய்ப் பொருளை உணர, ஐம்புலன்களை அடக்கி, மூவாசைகளை ஒழித்து, அகந்தையை அகற்றி, மும்மலங்களை நீக்கி, நன்னெறியில் ஒழுக வேண்டும் என்பதும் இங்கே உணர்த்தப்பட்டுள்ளது.                    

5. அருணகிரிநாதர் தமக்கு மெய்ஞ்ஞானம் அளித்த முருகப்பெருமானையே முழுமுதற் பொருளாகக் கண்டார்/கொண்டார். பசு ஞானத்தால் மட்டும் இறை உணர்வு நமக்குக் கிட்டாது; அதற்குப் பதி ஞானம் வேண்டும் என்னும் சித்தாந்தக் கருத்து இந்தப் பாடலில் பொதிந்துக் கிடக்கின்றது. ஐந்தெழுத்து மந்திரத்தால் இரு வினைகளைக் களையலாம் என்பதும் உணர்த்தப்பட்டுள்ளது. ஞான‌வேலைச் செலுத்தியது என்பது ஞானத்தினால் மாயையையும், அஞ்ஞானத்தையும், ஆணவத்தையும் அழிப்பதைக் குறிக்கும்.

6. ‘ஷ‌டாக்ஷரம்’ அல்லது 'சடக்கரம்' என்று சொல்லப்படும் ஆறெழுத்து மந்திரம் ‘நமோ குமாராய!’ என்பதே என்பார் திருமுருகாற்றுப்படைக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர். ‘சரவணபவ!,’  'குமாராயநம!' என்பவையே அந்த மந்திரம் என்றும் பலர் கூறுகின்றனர்.  ‘பணியும் அடியார் சிந்தை மெய்ப்பொருளதாக நவில் சரவண பவ!’ என்று அருணகிரியார் பாடியிருப்பதிலிருந்து அவரைப் பொறுத்தவரை 'சரவணபவ!' என்பதே ஷடாக்ஷர மந்திரம் என்பது தெளிவு. 'சரவணபவ!' என்பதே ஆகமதரீதியான வழக்கும் ஆகும். பாம்பன் சுவாமிகள், வாரியார் சுவாமிகள் ஆகியோரும் அருணகிரியாரின் அடியொற்றி 'சரவணபவ' என்பதே சடக்கர மந்திரம் என்று அருளியிருக்கின்றார்கள்.

7. பிரமன் குடுமியை முருகன் கலைப்பது வேகமாக, அழுந்தத் தலையில் குட்டியதால் நிகழ்ந்திருக்கலாம். பண்டைநாட்களில் சில சிற்றூர்களில் நடக்கும் வீர விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர் தோற்றவரின் குடுமியைக் கலைப்பது வழக்கத்தில் இருந்தது. மீண்டும் வெல்லும்வரை குடுமியை முடியாது அலைவது தோற்றவர்களின் வழக்கமாக இருந்திருக்கின்றது. இப்பொழுதும், சில கல்லூரி மாணவர்களிடையே இந்த வழக்கம் இருக்கின்றது என்று அறிகின்றோம்!

8. 'ஏரகத்து இறைவன் என இருந்தனையே!' என்று அருணகிரியார் இந்தப் பனுவலை முடிப்பது 'ஏரகமும் நீங்கா இறைவன் கை வேலன்றே!' என்று சிலப்பதிகார வரிபோல் அமைந்திருப்பதைக் காணலாம்.

9. இந்தப் பாடலில் இன்னும் ரசிக்கத் தக்கப் பல இருக்கின்றன. எல்லாவற்றையும் சுட்டிக்காட்டி எழுத ஆவல் உண்டு. ஆயினும், பதிவின் நீளத்தைக் கருத்தில்கொண்டு இத்துடன் முடித்துக்கொள்கின்றோம்.

இந்தப் பாடலைக் கேட்க‌:

இந்தப் பாடலைக் 'குருஜி' திரு. A.S. இராகவன் அவர்கள் ‘தர்பாரி கானடா’ இராகத்தில் பாடுவதைக் கேட்க இங்கே http://www.kaumaram.com/mp3_audio/grtp1326.mp3 சொடுக்கவும்.

நிறைவு:

இத்துடன் சுவாமிமலைத் திருப்புகழ் பாடல்களுக்குப் பொருள்விளக்கம் காணுவது முடிவடைகின்றது. குருவருளும், திருவருளும் கூடி வந்ததால் ஏதோ இந்த அளவிற்காகவாவது நம்மால் பொருள்விளக்கத்தை எழுத முடிந்தது. சுவாமிநாதசுவாமியின் திருவடிகளைப் பணிந்து முடிக்கின்றோம். அவன் திருவருளால் அனைவரும் அனைத்து நலத்தோடும், வளத்தோடும் இனிது வாழ விழைகின்றோம்!

நன்றி!

அன்புடன்,

ஹாங்காங் திருப்புகழ் சங்கம்

சுவாமிமலை திருவெழுகூற்றிருக்கை - Article 1 (Introduction)

This post is a compilation of 2 articles/write-ups by Sri Gurunathan sir of Honkong Thiruppugazh Sangam. A person I hold in very very high regard for his devotion, flair of language and most most importantly his deep deep knowledge of many Arunagirinathar literatures. Both the articles here are written by him for his own small group of thiruppugazh enthusiasts who have been following/living/breathing thiruppugazh for many many years now. Since these articles appeared in his close circles, I am now publishing them here so that i can reference them whenever I want and if possible, someone as interested as me can also read and understand them because these articles should  not be lost of anonymity.

Article 1 appears below in this post.

You may find Article 2 here

Article 1

திருஎழு கூற்றிருக்கை - ஒரு எளிய அறிமுகம்

 

இந்தப் பதிவு இந்தக் குழுவில் இருக்கும் ஒருசில ஆர்வமிக்க அன்பர்களின் வேண்டுகோளின்படி இங்கே இடப்படுகின்றது. சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நான் இன்னொரு குழவிற்காக எழுதிய இந்தப் பதிவை ஒருசில சிறிய மாறுதல்களுடன் இங்கே மீள்பதிவாக இடுகின்றேன்.

திருஎழுகூற்றிருக்கை அருணகிரிப்பெருமான் அருளிச்செய்தத் திருப்புகழ் மதாணியில் ஒளிவிடும் ஒன்பதாவது இரத்தினமாகும்.

இது ஒரு திருப்புகழ் பாடல் அன்று. இது அருணகிரியாரால் ஆக்கியருளப்பட்டத் தனிப் பனுவல் ஆகும். ‘ஓருருவாகிய தாரகப் பிரமத்து..’ என்று தொடங்கும் அந்தப் பாடல் திருவேரகத்துச் சுவாமிநாதசுவாமியின் மீதுப் பாடப்பட்டத் தனிப்பாடலாகும்.

முதலில், 'திருஎழுகூற்றிருக்கை' என்றால் என்ன, அதன் பாவகை, அமைப்பு, இலக்கண நெறிமுறைகள் என்னென்ன என்பது பற்றியெல்லாம் சற்றே அறிந்துகொள்வது நலம்பயக்கும்.

1. கவிவகை:

தமிழ்மொழியில் இருக்கும் ஆசுகவி, மதுரகவி, வித்தாரகவி, சித்திரகவி என்றநாற்கவி வகைகளில் திருஎழகூற்றிருக்கை என்பது சித்ரகவி வகையைச் சேரும். இதை மிறைக்கவி, ஓவியக்கவி என்றும் கூறுவர். எண்ணலங்காரம் என்ற அமைப்பில் பாடப்படுவன இவ்வகைப் பாடல்கள். எழுகூற்றிருக்கை என்பது தமிழில் இருக்கும் 96 சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகும்இவ்வகைப் பனுவல்கள் அநேகமாக இறைவனையும், இறையருளையும் கருப்பொருளாக வைத்துப் பாடப் படுவதால்திருஎன்ற அடைமொழியைச் சேர்த்து திருஎழுகூற்றிருக்கை என்று வழங்குவது மரபாயிற்று. திருஎழுகூற்றிருக்கை என்பதைப் பிரித்தால் திரு+எழு+கூற்று+இருக்கை எனப் பிரியும். ‘கூற்றுஎன்றால் ஒரு பொருளை அல்லது ஒரு கருத்தைக் கூறும் சொற்களின் கோர்வை என்பதாகும். முத்தி இன்பத்திற்கு வழியைக் காட்டும், ஆற்றுப்படுத்தும் கூற்றைக் கொண்டத் திருப்பாடல் திருஎழுகூற்றிருக்கை ஆகும்.

2. எழகூற்றிருக்கைக்கான இலக்கண விதிகள்:

கீழ்வரும் பாடல் இந்த வகைப் (குறிப்பாக இரதபந்த அமைப்பில் பாடப்படும்) பாடலுக்கானஇலக்கணத்தைச் சுட்டிக்காட்டும் பாடலாகும்:

 

ஒன்று முதலா ஓர்ஏழ் ஈறாச்

சென்ற எண் ஈரேழ் நிலந்தொறும் திரிதர

எண்ணுவ தொன்றாம் எழு கூற்றிருக்கைஅவைதாம்

இரதபெந் தத்தினில் இடையறை இரண்டாய்ச்

சரதம துறநடை சார்தரு பான்மையின்

ஒன்றுபன் னான்காய் ஒரு பன்னிரண்டாய்

நின்றய லேளவும் நிலந்தொரு முபயங்

குன்றுவ தாய்த்தொகை கூடியொன் றிலிறும்!

 

இதன் பொருள் : ஒன்று என்னும் எண் ஒன்று முதலாக ஒரேழ் ஈறாக வந்த எண்களைப் பதினாலு நிலந்தோறும் மீள எண்ணுவதாகும் எழுகூற்றிருக்கை. அங்ஙனம் எண்ணப்படும் எண்கள் இரதத்திற்குத் தருமிடத்து மையத்தில் பத்தி இரண்டிரண்டாய்க் கீறி வலமும், இடமும் வகுத்தலைத் தரும் பகுதியில் மையத்தில் ஒன்று பதினான்காகவும் அதன் அயல் இரு பத்தியில் இரண்டும் பன்னிரண்டாகவும், ஒழிந்த மூன்று முதலிய எண்ணும் பத்திதோறும் இரண்டு குறைந்து ஏழ் என்னும் தொகை பொருந்தி முதலே நின்ற ஒன்றில் வந்து முடியும்.

இந்த இலக்கண வகையில் பாடுவது மிகமிகக் கடினம். இவ்வகைப் பனுவல்களைப் பாடும் கவிஞருக்குப் பெரும்புலமையும், அதீதமொழித்திறனும் வேண்டும். அதற்கும் மேலாக, அவருக்கு இறைவனின் திருவருளும் நிறைந்திருக்க வேண்டும். சித்திரகவியை `அருளாளரல்லது பிறர் பாடலாகாது` எனத் தொல்காப்பிச் செய்யுளியல் உரையில் ஆத்திரையன் பேராசிரியனார் கூறி இருக்கின்றார்.

தமிழில் மட்டுமன்றி வடமொழியிலும் இவ்வகைப் பனுவல்கள் இருக்கின்றன. பொதுவாக, அஷ்டநாகபந்தம், ரதபந்தம், முரசபந்தம், பதுமபந்தம் போன்ற அமைப்புகளில் இந்தப் பாடல்களைப் பாடுவது முன்பு வழக்கத்தில் இருந்தது. ஆயினும், தமிழில் இன்று கிடைக்கும்/இருக்கும் திருஎழுகூற்றிருக்கைப் பாடல்கள் யாவும் ரதபந்த அமைப்பிலேயே இருக்கின்றன.

'பந்தம்' என்றால் 'அடைத்தல்,' 'பொருத்துதல்,' 'கட்டுதல்' என்று பொருள். இரதபந்தம் என்றால் சொற்களால் கட்டும் பாடலானது ஓர் இரதம் அல்லது தேர் போன்ற அமைப்பில் இருக்க வேண்டும். ஓர் இரதம் அல்லது தேர் எப்படி மேற்புறத்தில் குறுகியும், பின்பு படிப்படியாக விரிந்தும், மத்தியப் பகுதிக்குப்பின் படிப்படியாகக் குறுகியும் அமைந்து இருக்கின்றதோ, அதேபோன்று பாடலில் இருக்கும் எண்ணைக் குறிக்கும் சொற்கள் முதலில் குறுக்கத்தையும், பின்பு படிப்படியாக விரிவையும், மத்தியப்பகுதிக்குப் பின்னர் மீண்டும் படிப்படியாகக் குறுக்கத்தையும், இறுதியில் தொடக்கத்தைப் போன்ற குறுக்கத்தையும் கொண்டு அமையும். பாடலை இரதம்போல் வரையப்பட்ட ஓவியத்திற்குள் எண்ணுப் பெயர்கள் முறையாக அமைய அடைத்துக் காட்டுவர். அதனால்தான் இது சித்திரகவிகளில் ஒன்றான‌ `மிறைக் கவி` என்று அழைக்கப்படுகின்றது.

3. எண்களும், எழுகூற்றிருக்கையும்:

எண் கணிதத்தின் அடிப்படையில் அமைந்தவை இரதபந்த அமைப்பில் உள்ளஎழுகூற்றிருக்கை வகைப் பாடல்கள். இரதபந்தம் என்றால், மேலே குறிப்பிட்டபடி, பாடும் பாடலின் ஒவ்வொரு கூற்றிலும் இருக்கும் எண்ணைக் குறிக்கும் சொற்களின் எண்களை வரிசைப்படுத்தினால், ஒரு இரதம் அல்லது தேர் எப்படி மேலே குறுகியும் படிப்படியாக விரிந்தும் பின்னர் அடியில் குறுகியும் இருக்கிறதோ, அதே வடிவில் எண்களின் வரிசையும் அமைய வேண்டும். எழு கூற்றிருக்கைப் பாடலில் ஒன்று முதல் ஏழு வரை எண்களைக் கூட்டியும், குறைந்தும் வருமாறு அமைத்துப் பாட வேண்டும். தேருக்கு மேற்பாகம், கீழ்ப்பாகம் என்று இருப்பது போல், பாடலிலும் மேலிருந்து நடுப்பாகம் வரை ஏழு கூற்றுக்களும், நடுப்பாகத்திலிருந்து அடிப்பாகம்வரை ஏழுகூற்றுக்களும் இருக்க வேண்டும். பாடலில் பயன்படுத்தப்படும் சொற்கள் தம் ஒலி ஆற்றலாலும், பொருள் ஆற்றலாலும் எண்களைக் குறிக்குமாறும் இருத்தல் வேண்டும். அப்படிச் சொற்களை அமைத்துப் பாடும்போது, ஒவ்வொரு கூற்றின் பொருளும், ஒட்டுமொத்தப் பாடலின் பொருளும் சிறப்பாக அமையவும் வேண்டும்.

திருஎழுகூற்றிருக்கையில் எண்களைக் குறிக்கும் சொற்கள் வரும் அமைப்பு மேற்பாகத்தில் முதல் கூற்றில் ஒன்று, இரண்டாவதுக் கூற்றில் ஒன்று, இரண்டு, ஒன்று, மூன்றாவதுக் கூற்றில் ஒன்று, இரண்டு, மூன்று, இரண்டு, ஒன்று என்ற வகையில், ஏழு கூற்றுகளாக அல்லது அடுக்குகளாகக் கீழ்க்கண்டவாறு இருக்கும்:

1

121

12321

1234321

123454321

12345654321

1234567654321

பாடலின் கீழ்ப்பாகம் தலைகீழாக கீழ்க்கண்டவாறு அமைந்திருக்கும்:

1234567654321

12345654321

123454321

1234321

12321

121

1

அதாவது, ‘ஒன்றுஎன்னும் எண்ணை முதலாகக் கொண்டுத் தொடங்கி, படிப்படியே ஒவ்வொர் எண்ணாகக் கூட்டி ஏழு அடுக்குகளை அமைத்தும், பின்பு ஏழு முதல் ஒன்றுவரை ஒவ்வொரு எண்ணாகப் படிப்படியாகக் குறைத்து, ஏழு அடுக்குகளை அமைத்தும், நடுவில், இறைவன் வீற்றிருக்க ஒரு இடைத்தட்டை அமைத்தும் திருஎழுகூற்றிருக்கைப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன.

1, 121, 12321, 1234321, 123454321, 12345654321, 1234567654321 என்ற அமைப்பில் ஒவ்வொரு எண் அதிகமாகும் போதும், மீண்டும் எண்கள் கீழிறங்கி வருவதைக் காணலாம். இதனால், சாரங்களோடுக் கூடியக் கூம்புபோன்ற தேரின் மேற்பாகம் உருவாகின்றது. மேலும், தேரைச் சுற்றிலும் தொங்கும் அலங்காரத் தொங்கல்கள், கொடிகள், குஞ்சலங்கள் போன்ற தோற்றமும் இதனால் அமைகின்றது. தேரின் நடுப்பாகத்திற்குப் பிறகு மேலே குறிப்பிட்ட எண்களின் வரிசைகள் நேர் தலைகீழாக மாறி, அடுக்கி அமைந்து, தேரின் படம் போன்ற கீழ்ப்பாகத்தை உருவாக்குகின்றன. இறுதியில், தேரின் மேல்பாகத்தின் உச்சியில் தொடங்கியஒன்றுஎன்ற எண்ணிலேயே கீழ்ப்பாகமும் முடிகின்றது. அதாவது, கூற்றுக்களின் அமைப்பு இறுதியில் கீழ்க்கண்டவாறு அமைந்திருக்கும்:

1

1 2 1

1 2 3 2 1

1 2 3 4 3 2 1

1 2 3 4 5 4 3 2 1

1 2 3 4 5 6 5 4 3 2 1

1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1

. . . . . . . . . . . . . . . . . . . . . . .

இடையில் இறைவன் அமரும் தேர்த் தட்டு

. . . . . . . . . . . . . . . . . . . . . . .

1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1

1 2 3 4 5 6 5 4 3 2 1

1 2 3 4 5 4 3 2 1

1 2 3 4 3 2 1

1 2 3 2 1

1 2 1

1


4. Binomial Theorem:

மேலே இருக்கும் அமைப்பைப் பார்த்தவுடன் 'Binomial Theorem' என்ற கணித விதியின் அமைப்பில் எண்ணைக் குறிக்கும் சொற்கள் பாடலில் அமைந்திருப்பதைக் கணித விதிகளை அறிந்தவர்கள் உடன் கண்டுபிடித்துவிடுவார்கள்.

 

1

11^2=121

111^2=12321

1111^2=1234321

11111^2=123454321

111111^2=12345654321

1111111^2=1234567654321

 

இந்த அமைப்பில் ஒரு நுட்பமானக் குறியீடும் உண்டு. மேலே குறிப்பிடப்பட்டுள்ளக் கணிதஅமைப்பை அப்படியே திருப்பிப்போட்டுப்பார்த்தால் வருவதுக் கீழ்க்கண்டதாகும் :

 

1

121=11^2

12321=111^2

1234321=1111^2

123454321=11111^2

12345654321=111111^2

1234567654321=1111111^2

 

இடப்பக்கம் எண்கள் விதவிதமாக மாறினாலும், வலப்பக்கம் எல்லாம் ஒன்று என்னும் எண்ணின் அடிப்படையில் இருப்பதைக் காணலாம். எண்கள் வேறுவேறாகத் தோன்றினாலும் ஒன்றில் அமைந்திருப்பதைப்போல, பல்வேறு தெய்வ வழிபாடுகளும், தெய்வத்தை வழிபடாமையும் ஒன்றேயானப் பரம்பொருளுக்கே என்ற பேருண்மைக்கானக் குறியீடு இது என்பர்

இன்னும் சொல்லப்போனால், ஒவ்வொரு கூற்றின் கூட்டுத்தொகை எண்களான 1, 4, 9, 16, 25, 36, 49 என்பது 12, 22, 32, 42, 52, 62, 72 ஆக அமைந்திருப்பதையும் நாம் காணலாம்.

மேற்பகுதியின் 7 அடுக்குகளின் கூட்டுத்தொகை 140. அதேபோல் கீழ்ப்பகுதியின் 7 கூற்றுக்களின் கூட்டுத்தொகை 140. இவை இரண்டையும் கூட்டினால் 280. இந்த 280 என்ற எண்ணை பூஜ்ஜியத்தை நீக்கிவிட்டு ஒற்றை எண்ணாக ஆக்கினால் வருவது 1 ஆகும்.

இதனால், திருஎழுகூற்றிருக்கைப் பாடல் என்பதுஒன்றுஎன்ற முழுமையையும், ‘ஏகம்' என்றபெருமையையும் விளக்கும்படித் திகழ்கின்றது என்பர்.

5. தமிழில் உள்ளத் திருஎழு கூற்றிருக்கைப் பனுவல்கள்:

தமிழில் நான்கு அருளாளர்களே மேலும், கீழுமாக ஏழு அடுக்குகளைக்கொண்ட, இரதபந்த வடிவிலுள்ளப் பனுவல்களை அருளிச் செய்துள்ளனர். நக்கீரர், திருஞானசம்பந்தர், திருமங்கை ஆழ்வார் மற்றும் அருணகிரிநாதர் ஆகியோரே அந்த நால்வர். இந்த நக்கீரர் சங்கப் புலவர் நக்கீரரா என்பதில் ஐயத்திற்கு இடமுண்டு. மேலும், திருஞானசம்பந்தரே இந்தப் பாடல்வகையில் முன்னோடி என்றும் சொல்கின்றார்கள்

திருஞானசம்பந்தர் பாடியருளியப் பாடல்கள்அனைத்தையும் அவ்வப்போதுப் பாராயணம் செய்து வந்த அவரதுத் தந்தையார் சிவபாதகிருதயர் அவைகள் நாள்தோறும் எண்ணிக்கையில் பெருகிக்கொண்டு வருவதைக் கண்டார். அனைத்துப் பாடல்களையும் அன்றாடம் பாராயணம் செய்வது மிகக் கடினமாக ஆகிக்கொண்டிருந்தது. ஆகையால், தந்தையார் சம்பந்தரிடம் அவர் பாடிய அனைத்துப்பாடல்களையும் பாராயணம் செய்தப் பலன் கிடைக்கும் வண்ணம் அளவில் சிறிதான ஒரு பனுவலைப் பாடிடுமாறும், அது மிகமிகச் சக்தியுள்ள ஒரு சிவ ஸ்தோத்திரமாக அமைந்திருக்க வேண்டும் என்றும் பணித்தார். தந்தையின் சொல்லை மந்திரமாகக்கொண்ட திருஞானசம்பந்தர் முதன்முதலாகத் திருஎழு கூற்றிருக்கைப் பனுவலை இயற்றி அருளினார் என்று சொல்கின்றார்கள். நக்கீரர் சம்பந்தருக்குக் காலத்தால் மிக முந்தியவர். நக்கீரர் பாடியருளியாதாகக் கருதப்படும் எழு கூற்றிருக்கையின் மொழிநடை திருமுருகாற்றுப்படை மற்றும் சங்ககால நூல்களின் மொழி நடையிலிருந்துப் பெரிதும் மாறுபட்டும் விளங்குகின்றது

அண்மைக் காலத்தில் வாழ்ந்த, அருணகிரிப் பெருமானின் மறுஅவதாரம் என்று அழைக்கப்படுகின்ற, அருளாளர் வண்ணச்சரபம் ஸ்ரீ தண்டபாணி சுவாமிகள் 8, 9, 10 கூற்றிருக்கை என ஆதித்தன், விநாயகன், சிவன், அம்பிகை, திருமால், கந்தன் என அறுவகைச் சமயத்துக் கடவுளருக்கும் இவ்வகை கூற்றிருக்கைப் பாடல்களை வியத்தகு முறையில் பாடியருளியுள்ளார்.

பிற்காலப் புலவர்கள் சிலரும் கூற்றிருக்கைப் பாடல்களைப் பாடியருளியிருக்கின்றனர் என்று சொல்கின்றார்கள். அவைகள் அச்சில் இருக்கின்றனவா என்று எனக்குத் தெரியவில்லைஅவைகளைத் தேடி ஆராயவும் நான் முயலவில்லை.

பாரதிதாசன்கூட தமிழ்த்தாயைக் கூற்றிருக்கையில் ஏற்றிப்பார்க்க முயன்றதாகக் கேள்வி. ஆனால், அதைப்பற்றிய முழுவிவரம் தற்போது என்னிடமில்லை!

6. இரதத்தின் அமைப்பும், படமும்:

அருணகிரிநாதர் பாடியருளியத் திருஎழு கூற்றிருக்கைப் பாடலின் அடிப்படையில் சுவாமிமலைத் திருக்கோயிலின் இரண்டாம் தளத்தில் இரதத்தின் அமைப்பை படமாக உருவாக்கி அதைச் சலவைக் கல்லில் பொறித்து, அதைச் சுவற்றில் பதித்து வைத்திருக்கின்றார்கள். அது இணையத்தில் காணக்கிடைக்கின்றது.

அதைப் போன்ற படத்தை நாம் திருவண்ணாமலையிலும் இன்னும் சில முருகன் திருக்கோயில்களிலும் காணலாம். சுவாமிமலைக்கோ அல்லது திருவண்ணாமலைக்கோ தரிசிக்கச் செல்லும் அன்பர்கள் அவசியம் அங்கே கண்டுக் களிக்க வேண்டியவற்றுள் இந்த இரதபந்தப் படமும் ஒன்றாகும்.

7. அருணகிரிநாதரும், திருஎழுகூற்றிருக்கையும்:

வண்ண விருத்த அமைப்பில் புதிய உத்திகளைப் புகுத்தி அப்பாவினத்தின் சிறப்பைக் கூட்டிய அருணகிரிநாதர், திருஎழுகூற்றிருக்கைப் பாடலிலும் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர் காலத்துக்கு முன்னால் அருளிச்செய்யப்பட்டப் பாடல்களில், இரதத்தின் மேற்பகுதியில், முதற்கூற்றில், ஒன்று என்ற எண் அமையப் பாடப்பெற்ற அமைப்பு இல்லை. அருணகிரியாரே மேற்பகுதியின் எண் கட்டங்களுக்குச் சிகரம் வைத்தாற்போல் ஒன்று என்றஎண் அமையப் பாடி இருக்கின்றார்.

தத்துவார்த்தமாக, எல்லாம் ஒன்றில் தொடங்கி ஒன்றில் அமைகின்றன என்பதை இந்த அமைப்பு மேலும் சிறப்பாகக் குறிக்கும்படி இருக்கின்றது. மேலும், கீழும் உள்ள கூம்பு வடிவமும் இதனால் முழுமை பெறுகின்றது.

திருஞானசம்பந்தரை அருணகிரியார் முருகப்பெருமானின் அம்சமாகவே, தன் குருவாகவே கருதினார். ஞானசம்பந்தரின் அடியொற்றி, அருணகிரியாரும் திருஎழுகூற்றிருக்கை என்னும் அற்புதமானப் பாடல் வகையில் சுவாமிநாத சுவாமியின் மீது 'ஓருருவாகிய தாரகப் பிரமத்து..' என்று தொடங்கும் பாடலைப் பாடியுள்ளார்எப்படி ஞானசம்பந்தரின் திருஎழுகூற்றிருக்கையைப் பாராயணம் செய்தால், அவர் பாடிய அனைத்துப் பாடல்களைப் பாராயணம் செய்தப் பலன் கிடைக்குமோ, அதுபோன்று, அருணகிரியாரின் திருஎழுகூற்றிருக்கைப் பாடலைப் பாராயணம் செய்தால் அவர் ஆக்கியருளிய அனைத்துப் பனுவல்களைப் பாராயணம் செய்தப் பலன் கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு ஆகும்!


Continue to Article 2 சுவாமிமலை திருவெழுகூற்றிருக்கை - Article 2 (The Song and its essence)